முடிவில்லா தேடல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி தேடி.....சில சமயம் நானாகி, சில சமயம் வீணாகி, அந்த வளர் சிதை மாற்றங்களின் வார்த்தைகள் வடிவம் தான் இங்கே.........

முனி அடி (தேன்கூடு போட்டி)
சூரியன் தன் பார்வையை பூமியிலிருந்து முற்றிலுமாய் விலக்கிக் கொள்ள, இருளின் மேலாண்மை எங்கும். இரவோடு எங்களால் இவ்வளவு தான் போட்டி போட முடியும் என்று, தூரத்தில் சின்னதாய் செயற்கை ஒளிப் புள்ளிகள். சாலையின் இரு புறங்களிலும் நடு உடம்பில் 48, 49 என அரசாங்க பச்சைக் குத்தப் பட்ட புளிய மரங்கள், வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை.......அமைதியும் இரவும் ஆலோசிக்கொண்டிருந்த நேரம்......லப்..டப்...லப்...டப் என ரப்பர் செருப்பு தரையோடு தாளம் போட...அவள் நடந்து கொண்டிருந்தாள்....தனியாக....ஒரு பத்து நிமிடங்களாக....அப்போது "ப்பீ...ப்பீ..." என்ற ஹார்ன் சத்தத்துடன்....இரவை கொஞ்சம் ஹெட்லைட் மூலம் நிர்வாணமாக்கிக் கொண்டே...போனது ஒரு மோட்டார் சைக்கிள்.


"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......." எனக் கத்திக் கொண்டே பின்னாலேயே ஓடினாள் இவள். சத்தம் கேட்டு மோட்டார் சைக்கிள் நின்றது.
"என்னாம்மா"
"சார்! அந்த சாவடி முக்குட்டுல கொஞ்சம் எறக்கி விட முடியுமா ?"
"சரி ! சரி! ஏறிக்க ! கம்பிய கெட்டியா புடிச்சிக்க" மோட்டார் சைக்கிள் நகர்ந்தது

ஒரு அறுவது சொச்சம் குடிசைகள், கூரை வீடுகள், ஏழெட்டு மச்சு, ஒட்டு வீடுகள், கொஞ்சம் ஜனங்கள், ஆடு மாடு பன்றிகள்னு ஒரு சராசரி இந்திய கிராமம் தான் மந்தியூர். அங்கு ஒரு வீட்டில், சோளத் தட்டையை அடுப்பில் செருகி, ஊதாங்குழலால்....உஸ்...உஸ்ஸென்று ஊதி நெருப்பை உசுப்பேத்திக் கொண்டிருந்தாள் வள்ளி.


வாசலிலிருந்தே "ஐசு !! ஐசு !!" எனக் கூப்பிட்டுக் கொண்டே வந்தான் செவப்பு.
"ஏ புள்ள ! எங்க புள்ள ஐசு" வள்ளியை கேட்டான்
"இன்னும் ஊட்டுக்கு வள்ள, அந்த மாலா பொட்டை கூட பேசிட்டு இருக்கும்...போயி கூட்டியா"
கூட்டி வர போனான் செவப்பு.


செவப்புக்கு அவன் அம்மா அப்பா வெச்ச பேரு "செந்தாமரை". "பொறந்தப்ப பார்க்க செவப்பா, அழகா...இருப்பான். அதான் செந்தாமரைன்னு பேரு வச்சோம்"னு அவன் அப்பன் சொல்வான். ஊர் வச்ச பட்ட பெயர் தான் "செவப்பு". அவனுக்கும் வள்ளிக்கும் பொறந்தது தான் அவன் "ஐசு ! ஐசு !" ன்னு செல்லமா கூப்பிடுற "ஐஸ்வர்யா". ஒரு நாலு வருசத்துக்கு முன்னால், ஒரு நாள் வள்ளிக்கு திடீரென வயிற்று வலி வர, அவளுக்கு புரியாத எதோ காரணத்திற்காக அரசாங்க ஆஸ்பத்திரியில் அவள் கர்ப்பப் பையை கழட்டி விட்டார்கள். ஒரு பிள்ளை தான் என ஆகிவிட்டது.

செவப்பு கொஞ்சம் அப்பிராணி -- வள்ளியே அப்படி சொல்வாள். வள்ளி கறுப்பா இருந்தாலும் களையா இருப்பா. கெட்டிக்காரி. வள்ளி தான், வயல் வேலை செஞ்சிட்டுருந்தவனை, "இந்தா! இங்க என்னாத்த சம்பாதிக்க முடியும். அந்த பொட்டைக்கு நாலு காசு சேத்து வக்க வேணாமா?. பக்கத்து டவுனுல போயி வேல செய்லாம்.நானும் வரேன்"னு சொல்லி, அவன் பஸ் ஸ்டாண்டுல மூட்டை தூக்குற வேலையும், இவள் சித்தாள் வேலையும் செய்ய ஆரம்பிச்சது.

அவள் தான் "இந்தா! நாம படுற கஷ்டம்லாம், நம்ம புள்ள பட கூடாது. அவள நல்லா படிக்க வெக்கனும். பெரிய ஆபிஸராக்கனும்" னு பக்கத்து டவுன் மாதா கோயில் பள்ளிக் கூடத்துக்கு ஐசுவை அனுப்பியவள். அவள் ஊரிலேயே ஐசும், மெத்தை வீட்டு மாலா வும் தான் அந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். அதில் அவளுக்கு பெருமை.

செவப்பு, மாலா வீட்டு வாசலிலிருந்து "ஐசு!ஐசு" என கூப்பிட்டான். மாலா மட்டும் வெளியே வந்தாள்.

"மாலா !! ஐசு உள்ள இருக்கா ??"

"இல்ல மாமா, அவ இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் வருவா மாமா. டீச்சர் பரிச்சை பேப்பர் திருத்தனும்னு கொஞ்ச நேரம் இருக்க சொல்லிட்டாங்க. கடசி பஸ்ஸில வரேன்னு சொன்னா"
"சரி. அது வந்தா நேரா ஊட்டுக்கு வர சொல்றியா "
மாலா சரியென தலையாட்ட...செவப்பு வீட்டுக்கு வந்தான். வள்ளியிடம் சொல்லி விட்டு படுத்து விட்டான்.

"இந்தா!!! உன்ன தான்! கடசி பஸ் வந்திட்டு போயிடுச்சு...புள்ளய காணோம். எழுந்திருயா!. பஸ்ஸை வுட்டுடுச்சோ என்னவோ"

"என்னா புள்ள! மணி பத்தாவ போவுது. முன்னாலேயே சொல்லக்கூடாது"

"இந்த பஸ்காரன் என்னைக்கு நேரத்துல வந்துருக்கான். செத்த முன்னாடி தான் போனான்"
"சரி! சரி! வா! அந்த அரிகேனயும், பேட்ரி லைட்டும் எடு...புள்ள தனியா நடந்து வருதோ என்னவோ தெரியல"

இருவரும் மீண்டும் மாலா வீட்டுக்கு போனார்கள். அங்கு அவள் வரவில்லை என சொல்லவே, டவுனுக்கு போற ஒத்தையடி பாதையிலே நடக்க ஆரம்பித்தார்கள். அந்த பாதை சாவடின்னு ஒரு ஊர்ல போய் சேரும், அது ஒரு 5கிமீ இருக்கும். அங்கிருந்து, 1 கிமீ டவுன். ஒண்ணரை மணிக்கு ஒரு தரம், ஒரு பஸ். எட்டு மணியோட கடைசி பஸ். அதை விட்டா நடந்து தான் போக வேண்டும். இன்னோரு பாதை 10 கிமீ எடுக்கும். பஸ்...வழி அது.
செவப்பும் வள்ளியும் ஒத்தையடி பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் பக்கத்து தெரு களக்கட்டை (அவன் நிஜப் பெயர் : இளமாறன்) பார்த்தார்கள்.


"லே, களக்கட்டு...ஐசுவை பாத்தியாடா" - செவப்பு கேட்டான்.
"இல்ல செவப்பு. இன்னுமா வரல ? பொட்ட புள்ள தனியாவா வருது. சீக்கிரம் போங்க! முனி கினி அடிச்சிட போகுது"
"நீ வேற களக்கட்டு.....அபச குணமா பேசிட்டு. வா நீ "- வள்ளி கோபத்தோடு சொல்லிவிட்டு நடந்தாள். அந்த பாதையில் ஒரு முனி கோயில் இருக்கிறது. நேரம் கெட்ட நேரத்தில் போனால் முனி அடிச்சிடும் என்ற பயம்....அங்கு எல்லோருக்கும் உண்டு ஒரு சில இளவட்டங்களைத் தவிர.

முனி கோயிலயும் தாண்டி "சாவடி முக்குட்டு" க்கும் வந்து விட்டார்கள். ஆள் நடமாட்டமே இல்லை.
"இந்தா! லைட்ட அடிச்சு பாரு எல்லா எடமும்". "அய்யா! முனியாண்டி, என் புள்ளைக்கி ஒன்னும் ஆவ கூடாது. நீதான் தொன" -- வள்ளி அழ ஆரம்பித்து விட்டாள். செவப்புக்கும் கண் கலங்க ஆரம்பித்து விட்டது.
"வா புள்ள! பஸ்சு போற வழில பாக்கலாம். முனிக்கு பயந்து இந்த வழில போவுதான்னு தெரியல"
"என் புள்ள எங்க போயி நிக்கிறாளோ.....தெரியிலயே."--வள்ளி ரொம்பவும் அழ ஆரம்பித்து விட்டாள்.

ஒரு இரண்டு மைல் நடந்திருப்பார்கள்.

லைட்டை அடித்துக் கொண்டே வந்த செவப்பு, ரோட்டு இறக்கத்தில்....ஒரு கருவை புதருக்கு பக்கத்தில் எதோ வெள்ளையாகத் தெரிய...

"வள்ளி !!! அங்கன பாரு புள்ள, எதோ வெள்ளயா தெரியுது...வா! போயி பாக்கலாம்"
லைட்டை அடித்துக் கொண்டே வந்தவன்...அதிர்ந்து போனான்.
ஐசு வாயும் கையும் கட்டப் பட்டுக் கிடந்தாள். கண்களிலிருந்து தாரையாக கண்ணீர். மேலுடம்பில் சட்டை இல்லை. அதை கிழித்து தான்...வாயும் கையும் கட்டப் பட்டிருந்தது. ஊதா பாவாடை தாறுமாறாக....கிடந்தது...மறைக்க வேண்டியதை மறைக்காமல்.....உதிரம் உறையாமல்.....உடலின் பல பகுதிகளில் சிறு காயங்களுடன்...

"ஐயோ!!! ஐய்யய்யோ !!!! நம்ம புள்ள தான்யா" -- வள்ளி அடி வயிற்றிலிருந்து அலறினாள். வள்ளிக்கென்னவோ உதிரம் உலர்ந்து தான் போனது.

சட்டையை கிழித்து தான் வாய் கை கட்டப்பட்டிருந்தது.
மீதமிருந்த அவள் மேலே கிடந்த துணி தான் லைட் அடையாளம் காட்டியது.
வாயிலிருந்த துணியை அவிழ்த்த உடனே......"அம்மா! அம்மா!........." என வள்ளியை கட்டிக் கொண்டு அடி வயிற்றிலிருந்து அழ ஆரம்பித்து விட்டாள் ஐசு.

"அம்மா! ..ஒரு...ஒரு.. மோட்ருசைக்கிள்ள வந்த ஆள, என்ன சாவடி முக்குட்டுல வுட சொன்னேன். அந்த ஆளு இங்கன கொண்ட்டு வந்து..."- வள்ளி தேம்பி தேம்பி சொன்ன ஐசுவின் வாயை கையால் மூடிக்கொண்டாள்.

"வேணா, ஆயா, சொல்லாத. என் வவுறு எறியது"

"என்னா புள்ள..... நாம பண்ண போறோம்......" -- குரல் உடைந்து ரெண்டு கையவும் தலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் செவப்பு.

"ஒத்த கிளி பெத்து....என்
உசுரயே.. நான் கொடுத்து....
ஆபிசரு ஆவனுன்னு...
அசலூரு நா அனுப்ப...என்
பச்சை கிளிய....
பாழாக்கி போனானே...எந்த
படுபாவி பெத்த மயன்"......ஏ செவப்பு.......என் ரெத்தம் கொதிக்குதுய்யா!!!
வள்ளி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

செவப்பு.....துண்டை வாயில் வைத்து....உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.

வள்ளி தான் கொஞ்சம் சுதாரித்து, "தூக்குயா புள்ளய !!!. யாராவது கேட்டா முனி அடிச்சிடுச்சி...ன்னு சொல்லு. ஆயா ஐசு, ஆரு கேட்டாலும் எதுவும் சொல்லாத"

செவப்பு கைலியை அவிழ்த்து, ஐசு உடம்பை சுத்தி...தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

ஒன்றும் அறியாத அந்த ஒன்பது வயது....பிஞ்சு.....தனக்கு இழைக்கப் பட்ட அநீதியைக் கூட...என்னவென்று தெரியாமல்....தந்தையின் அரவணைப்பிலோ.....அல்லது....பெற்றோரைக் கண்டதாலோ...அல்லது....இயற்கையின் உந்துதலாலோ......அப்படியே உறங்கிப் போனாள்.

"முனி அடிச்சும் பொழச்சிக்கிச்சுல்ல!!! முனி ரோசக்காரந்தான். ஆனா, தன் புள்ளய எப்படி கொல்லுவான் !!! சும்மா பயமுறுத்தி விட்டுறுப்பான். அவனுக்கு கெடா வெட்டி ரெண்டு வருஷமாச்சே. அதான் வேலெய காட்டிப்புட்டான். கொஞ்ச நாள் அந்த பொட்டைய அலற அடிச்சிதான் நிப்பாட்டுவான்... " -- முனி கோயில் பூசாரி செவப்புவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

முனிக்கு இப்பொழுது நிறைய படையல் நடக்கிறது. இனிமேலெயும் யாரையும் அடிச்சிடக் கூடாதுன்னு. முனி என்னவோ முன்னெப்போதும் போல அப்படியே தான் நிற்கிறது.

[பி.கு : நமது பாரதத்தில் ஒவ்வொரு 13 மணி நேரத்திற்கும், ஒரு பத்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள்--ஆதாரம் : FrontLine]

9 மறுமொழிகள்:

Blogger Babble மொழிந்தது...

frontline - சுட்டியையும் குடுங்களேன்.

 
Blogger நிர்மல் மொழிந்தது...

செந்தில் அருமையா இருக்கு.

உங்கள் கதைகளின் கரு எப்போதும் மிக வலுவானதா இருக்கு

நல்ல நடை மற்றும் மொழி.

தொடர்ந்து எழுதுங்க.

 
Blogger Siththan மொழிந்தது...

babble...என் கதையை கண்ணுற்றதற்கு நன்றி. இதோ அந்த சுட்டி :

http://www.hinduonnet.com/fline/fl2021/stories/20031024001609000.htm

 
Blogger Siththan மொழிந்தது...

//செந்தில் அருமையா இருக்கு.

உங்கள் கதைகளின் கரு எப்போதும் மிக வலுவானதா இருக்கு

நல்ல நடை மற்றும் மொழி.

தொடர்ந்து எழுதுங்க.

//

மிக்க நன்றி நிர்மல்.நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு. எனக்கு நெருங்கிய ஒருவருக்கு நிகழ்ந்த ஒன்றை தான் சற்று மாற்றி அமைத்துள்ளேன். ஏதோ தெரிந்ததை எழுதியுள்ளேன்.

 
Blogger பழூர் கார்த்தி மொழிந்தது...

உரையாடல்களாலும், வர்ணனைகளாலும் கிராம மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் கொண்டு வருகிறீர்கள், வாழ்த்துக்கள் !!

***

"ஒத்த கிளி பெத்து....என் உசுரயே.. நான் கொடுத்து...." என்று கவிதை மனதைப் பிழிகிறது.

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்
!!

 
Blogger Siththan மொழிந்தது...

//உரையாடல்களாலும், வர்ணனைகளாலும் கிராம மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் கொண்டு வருகிறீர்கள், வாழ்த்துக்கள் !!//

மிக்க நன்றி சோ.பையன், உங்கள் அலுவல்களுக்கிடையில் என் கதையை படித்து கருத்துக்களை சொன்னதற்கு.

 
Blogger அமுதன் மொழிந்தது...

நெஞ்சை நெகிழ வைத்த சிறுகதை.

//வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை.// நடையில் நன்றாகவே மெனக்கெட்டிருக்கிறீர்கள்.

"ஒத்த கிளி பெத்து....என்
உசுரயே.. நான் கொடுத்து....
ஆபிசரு ஆவனுன்னு...
அசலூரு நா அனுப்ப...என்
பச்சை கிளிய....
பாழாக்கி போனானே...எந்த
படுபாவி பெத்த மயன்"

கல்லுள்ளத்தையும் கரைய வைத்து விடும் ஒப்பாரி வரிகள்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 
Blogger Siththan மொழிந்தது...

//கல்லுள்ளத்தையும் கரைய வைத்து விடும் ஒப்பாரி வரிகள்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி அமுதன், என் கதையை படித்து பாரட்டியதற்கும் மற்றும் வாழ்த்திற்கும். உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 
Blogger முரட்டுக்காளை மொழிந்தது...

//பாழாக்கி போனானே...எந்த
படுபாவி பெத்த மயன்

ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...

 

Post a Comment

<< முகப்பு